Rajarata News
பிரதான செய்திகள்

சுஐப் எம். காசிம்-
ஶ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனையின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பைச் செய்ததால் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். 
மஹிந்த எனும் தனிநபரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் எதிரொலிகள் இன்னும் எந்தத் திசைகளைத் திருப்பித்தாக்குமோ தெரியாது.தற்போதைக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மாத்திரம் மத்தளம் போல் இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பித் அடித்துக் கொண்டிருப்பது மட்டும் உண்மை.
19 ஆவது திருத்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே. கட்சி இரண்டாகப் பிளவு பட்டு ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன உருவானமை,கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 17 சபைகளை மாத்திரம் கைப்பற்றி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டமை, இந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு கடிவாளம் இடப்பட்டமை, எதிர்வரும் தேர்தலில் தனித்து நின்று ஜெயிக்க முடியாதுள்ளமை எல்லாம் 19 ஆவது திருத்தத்தால் இக்கட்சிக்கு வந்த பின்னடைவுகள். ஐக்கிய தேசியக் கட்சியின் சாயலில் வளர்ந்து அதிகாரங்களூடாகக் கட்சியை வளர்க்கும் திட்டம் இடையில் தகர்ந்து போனமைக்கு 2018 நவம்பர் 26 ஆட்சிக் கவிழ்ப்பே காரணமாகியது.
ஒரு வேளை மைத்திரியை நடுத் தெருவில் நிற்க வைக்க எவரால் இந்த யுக்தி கையாளப்பட்டதோ என்ற எண்ண அலைகள் பலரைத் தாக்குவதும் உண்டு. ஐக்கிய தேசியக் கட்சியுடன் நட்பு தொடர்ந்திருந்தால் ஒருவாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க லாம்.ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியைத் தவிர எதிர்காலத்தில் எவரும் அதிகாரத்தில் நிலைக்க முடியாதெனச் சிலர் இப்போதிருந்தே ஆரூடம் கூறுகின்றனர்.

மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 240 ஐக் கைப்பற்றிய பின்னரான கணிப்பீடுகளே இவை. ஆனால் இத்தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கு களில் 45 வீதத்தையே மஹிந்த தரப்பிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றதாகச் சிலர் வீதாசாரம் காட்டி விகிதாசாரத் தேர்தலில் இது வெற்றியில்லை என்கின்றனர்.
இக் கட்சிக்கு எதிராக 55 வீத வாக்குகள் உள்ளதாகக் கூறும் ”ரணிலின் டையமண்ட்ஸ் எலைன்ஸ்” இவ்வாறான பாரிய அரசியல் கூட்டே எமது எதிர்காலத் தேர்தல் வியூகம் என்று இப்போதிருந்தே வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளது. ரணிலின் இந்த எலைன்ஸ் மிக எளிதாக வெல்ல வேண்டுமானால் மைத்திரி,மஹிந்த கூட்டு தோல்வியடைய வேண்டும்.எவரும் எதிர்பாராத வகையில் இப்போது தோல்வியின் விளிம்புக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன என்பன வந்துள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனை என்ற பொதுப் பெயரில் இக்கட்சிகள் உருவாக்கவுள்ள தேர்தல் கூட்டு பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பாரக்கப்பட்டது. இவ்வாறு ஒரு கூட்டு உருவாவது இந்நாட்டு மக்களில் முதலாவதாக ரணிலின் வயிற்றையே கலக்கியிருக்கும்.தன்னை வைத்தே இந்தத் தேர்தல் அம்பு செய்யப்படுவதாக ரணில் நினைப்பதில் தப்பும் இல்லை.ஆனால் இவ்வாறான ஒரு கூட்டு கைகூடினாலும் வெற்றிவாய்ப்புக் கைகூடுமா? என்பதில் இக்கூட்டணி நிறுத்தப் போகும் ஜனாதிபதி வேட்பாளரிலேயே தங்கியுள்ளது.
கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்தினால் சிறுபான்மையினரின் வாக்கும், மைத்திரியை நிறுத்தினால் சிங்களவர்களின் வாக்கும் இக்கூட்டணிக்கு கிடைக்காதென்பது சிலரின் வாதம். ஏற்கனவே மஹிந்த பெற்றுள்ள 45 வீத வாக்குகளில் எண்பது வீதமானவை (35) சிங்களவர்களின் வாக்குகளாகும். எனவே 75 வீத சிங்கள வாக்குகளில் எஞ்சியுள்ள 40 வீதத்தில் ஐக்கிய தேசிய கட்சி எத்தனை வீதத்தைப் பெறும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வளவு பெறும் என்பதில்தான் தீர்மானிக்கும் சக்தி யார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எஞ்சியுள்ள 40 வீத சிங்கள வாக்குகளில் 30 வீதத்தை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்டதாக வைத்தால் பத்து வீதத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெறு மென்பதே கணிப்பீடு.
இந்தப் பத்து வீதத்தையும் மைத்திரி மஹிந்தவுக்கு வழங்கினால் சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள பத்து வீத வாக்குகளுடன் 55 வீதமாகும்.இதுதான் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனயின் கணக்கு.ஒருவாறு மைத்திரி-மஹிந்த கூட்டு முறிந்தால் பத்து வீத வாக்குகளுக்காக ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தனியாக களமாடும்.இந்த ஆட்டத்தில் பெரியளவில் சிறுபான்மையினரின் விக்கட்டுக்களை வீழ்த்த முடியாது என்பது மஹிந்தவுக்குத் தெரியாதல்ல.இதற்காகவே அவர் ஐ.நா,ஜெனீவா அமர்வுகளைக் கையில் எடுத்துள்ளார். தன்னைத் தோற்கடித்த கையோடு இந்த அரசு 2015 ஒக்டோபரில் செய்த வேலைகளைப் பட்டியல் படுத்துவார் ராஜபக்‌ஷ. இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவம் ஈட்டிய வெற்றியை படுகொலையாகக் காட்டியுள்ளனர். சிவிலியன்கள் மீது குறி வைத்து தாக்கியமை, பலாத்காரக் காணாமல் போதல், பாதிக்கப்பட்டோருக்கான மனிதாபிமான உதவிகளை படையினர் தடுத்து நிறுத்தியதாக மைத்திரியும் ரணிலும் ஐநாவில் இணங்கியுள்ளனர் என்பார்.

இது மட்டுமா இவ்வாறான குற்றங்கள் புரிந்த எமது சிங்கள இராணுவத்தை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கும் அரசாங்கம் ஒத்துழைத்துள்ளது. hybrid court இந்த நீதிமன்றத்தில் வௌிநாட்டு நீதிபதிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் செல்வாக்கிலுள்ள நீதிபதிகளே எமது சிங்கள இராணுவத்தை விசாரிப்பர். இது மட்டுமா! போதாததற்கு office for missing person காணாமல் போனோருக்கான அலுவலகத்தை 2018 இல் ரணில்,மைத்திரி அரசாங்கம் திறந்துள்ளது.
பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள்,சிறைச்சாலைகளைத் தேவையான நேரத்தில் சோதனையிட உத்தரவிடும் அதிகாரமும் இந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையும் தாண்டி தகவல் அறியும் சட்டமூலத்தில் தேவையான ஆவணங்களை தேவையான நாடுகளுக்கு வழங்கவும் ரணில் மைத்திரி அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது என்பார்.சிங்கள இளைஞர்கள் (இராணுவம்) எந்த நாட்டில்,எந்த நீதிபதிகளால் விசாரிக்கப் படுவர் என்பதே சூன்யமாகியுள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டையும் எமது இராணுவத்தையும் மீட்டெடுக்க ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனைக்கு வாக்களியுங்கள் என்பார் மஹிந்த.

இதனால் ஏற்கனவேயுள்ள 35 வீதத்துக்கு மேலதிகமாக எத்தனை வீத சிங்கள வாக்குகளைப் பெறுவார் என்பதிலும் சிறுபான்மையினரின் (தமிழ்,முஸ்லிம்) 25 வீதத்தில் எத்தனை வீதம் கிடைக்கும் என்பதிலுமே வெற்றியின் எதிர்காலம் தங்கியுள்ளது. ஏற்கனவே மஹிந்த தரப்பினர் 10 வீத சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுள்ளமை உள்ளூராட்சித் தேர்தலில் நிரூபணமானவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கொட்டாவ , பன்னிபிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் அவரது மனையினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

மனைவியுடன் குறித்த நபருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலுக்கு உள்ளான கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

குறித்த மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொட்டாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நியூசிலாந்தில் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மாசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.


அவர்களில் பெரும்பான்மையானோர், நியூசிலாந்தின் பாதுகாப்பு, தரம் வாய்ந்த கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை எண்ணி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, பல்வேறு காரணங்களுக்கான குடிபெயர்ந்தவர்கள்.


"என்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒரு மிகச் சிறந்த நாடு கிடைத்துள்ளதாக நான் நினைத்திருந்தேன்," என்று கூறுகிறார் கிரைஸ்ட்சர்ச் தாக்குதலிலிருந்து தப்பித்தவர்களில் ஒருவரான மசாருதீன் சையத் அஹ்மத்.


இந்நிலையில், கிரைஸ்ட்சர்ச் தாக்குதலில் உயிரிழந்த 50 பேரில் சிலரது மனதை உருக்கும் வாழ்க்கை குறிப்புகளை காண்போம்.


"தப்பி பிழைத்து வந்து மரணித்தனர்"


44 வயதான காலீத் முஸ்தாபா மற்றும் 16 வயதான அவரது மகன் ஆகியோர் சிரியாவின் உள்நாட்டு போரிலிருந்து தப்பி பிழைத்தவர்கள். இவர்களது குடும்பத்தினர் ஏழு பேரும் முதலில் சிரியாவிலிருந்து ஜோர்டானுக்கு சென்ற நிலையில், பின்பு நியூசிலாந்தின் அகதிகள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் கிரைஸ்ட்சர்ச் நகரத்துக்கு சுமார் ஓராண்டுக்கு முன்னர் வந்தனர்.


ஏனையவர்களை போன்றே நியூசிலாந்தை பாதுகாப்பான நாடாக நினைத்துக்கொண்டிருந்த இவர்கள் இருவரும், கடந்த வெள்ளிக்கிழமை கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள அல்-நூர் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.


1990ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறியவரான அபு அலி என்பவர், காலீத்தின் குடும்பத்தினரை தான் ஒருமுறை சந்தித்துள்ளதாகவும், அவர்கள் நியூசிலாந்தில் இருப்பதை எண்ணி மகிழ்வுடன் வாழ்ந்து வந்ததாக கூறுகிறார்.


"மரணத்திலிருந்து தப்பி பிழைத்த அவர்கள், இங்கு வந்து மரணித்தனர்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.


கிரைஸ்ட்சர்ச்சின் இருவேறு மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 24 வயதான அன்சி அலிபாவாவின் வாழ்க்கை பயணம் மிகவும் வித்தியாசமானது.


தென்னிந்திய மாநிலமான கேரளாவை சேர்ந்த அன்சி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சௌதி அரேபியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த தந்தை உயிரிழக்க, தனது 18 வயதிலேயே குடும்பத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் அன்சி.


தங்களது முதல் சந்திப்பிலேயே அன்சி 'அரவணைப்ப்பு மிக்க குணத்தை" கொண்டிருப்பதை எண்ணி தான் அசந்துபோய்விட்டதாக கூறுகிறார் அவரது கணவர் அப்துல் நசீர்.


வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க வேண்டும், பல்வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டுமென்ற எண்ணத்தை கொண்ட இவர்கள், கடந்த ஓராண்டுக்கு முன்புதான் நியூசிலாந்துக்கு சென்றனர்.


கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே, பணிபுரிந்த அன்சியும், அவரது கணவரும் சம்பவ தினத்தன்று அல்-நூர் மசூதிக்கு சென்றனர்.


துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்த அன்சி, அருகிலுள்ள வீட்டிற்குள் வேலியை தாண்டி குதித்தார். அன்சியை தேடி சென்ற அப்துல், அவர் தெருவோரத்தில் அசைவற்று கிடைப்பதை கண்டார். அப்போது, மசூதிலிருந்து வெளியே தப்பித்து வந்த சிலர், அன்சி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாக அப்துல் கூறுகிறார்.


தன் மனைவியை இழந்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார் அப்துல்.


கடந்த புதன்கிழமையன்று இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மொஹம்மது இம்ரான் கானுக்கு அவருக்கு சொந்தமான உணவகத்தின் முன்பு பலர் அஞ்சலி செலுத்தினர்.


இந்தியாவை சேர்ந்த இவர், கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் லின்வுட் மசூதியில் நடத்தப்பட்ட இரண்டாவதாக தாக்குதலில் உயிரிழந்தார்.


"என்னுடைய கணவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எண்ணிலடங்கானோர் குறுஞ்செய்தி செய்து வருகின்றனர். இது அவர் எவ்வளவு அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை காட்டுகிறது" என்று அவரது மனைவி டிரேஸி கூறுகிறார்.


"என்னுடைய கணவரை அனைவரும் நேசித்தார்கள் என்பது தெரியும். ஆனால், அதன் அளவு இவ்வளவு இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.


தன்னுடைய பதின்ம வயது மகனையும், இருவீட்டாரின் உறவினர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாக டிரேஸி கூறுகிறார்.


நியூசிலாந்து தாக்குதலில் உயிரிழந்தவர்களில், அந்நாட்டை சேர்ந்த 64 வயதான லிண்டா ஆம்ஸ்ட்ராங்கும் ஒருவர்.


"தனது இளமைக்காலத்தில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரத்துக்கு அருகே உள்ள தீவு ஒன்றில், குளியலறை கூட இல்லாத இடத்தில் வாழ்ந்த லிண்டா, பிறகு நகரத்துக்கு குடிபெயர்ந்து மிகப் பெரிய வீடுகளில் வாழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிளிலேயே பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். சிறிது காலம் ஜெர்மனியிலும் வாழ்ந்தார்" என்று கூறுகிறார் அவரது மருமகனான கைரோன் கோசி.


எப்போதும் உத்வேகத்துடன் காணப்படும் லிண்டா, 2011ஆம் ஆண்டு இஸ்லாமில் ஆர்வம் கொண்டதுடன், ஆக்லாந்திலுள்ள முஸ்லிம்கள் அகதிகள் முகாம் ஒன்றில் சேவை செய்தார்.


ஒருகட்டத்தில், இஸ்லாம் குறித்து பல்வேறு விடயங்களை தெரிந்துகொண்ட லிண்டா என்னிடம்,"இவர்கள் (இஸ்லாமியர்கள்) மிகவும் அருமையானவர்களாக உள்ளனர். நான் இந்த மதத்துடன் மிகவும் ஒன்றியதை போல உணருகிறேன்" என்று கூறினார்.


"சம்பவ தினத்தன்று மசூதியின் பின்பகுதியில் அமர்ந்திருந்த லிண்டா, துப்பாக்கி சத்தத்தை கேட்டு, கூட்டத்தினருக்கு முன்பு வந்து, சுடப்பட்டு இறந்தார்" என்று அவர் மேலும் கூறினார்.


கிரைஸ்ட்சர்ச் நகரத்தை சேர்ந்த பலருக்கும் 57 வயதான இதயநோய் நிபுணரான அம்ஜத் ஹமீதை தெரிந்திருக்கிறது.


"மருத்துவர் அம்ஜத்தை நான் சந்தித்தபோது, என் உடல்நிலையை கருதி பணி ஓய்வு பெறுமாறு வலியுறுத்தினார். என் போன்ற பலரது உயிரை காப்பாற்றிய அவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று கூறுகிறார் நியூசிலாந்தை சேர்ந்த பீட்டர் ஹிக்கின்ஸ்.


பல தசாப்த ஆண்டுகளுக்கு முன்னதாக பாலத்தீனத்திலிருந்து நியூசிலாந்தில் குடியேறியவரே மருத்துவர் அம்ஜத் ஹமீது.


கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலை இந்த நகரத்தில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்த சம்பவத்தோடு பலர் ஒப்பிடுகின்றனர்.


அந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, நகரத்தை மீட்டெடுப்பதற்காக பணியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.


அவ்வாறு நியூசிலாந்துக்கு வந்தவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த ஜக்கரியா புய்யாவும் ஒருவர். கிரைஸ்ட்சர்ச்சில் வெல்டராக பணியாற்றிய ஜக்கரியா, சம்பவ தினத்தன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விடுமுறை எடுத்திருந்தார்.


நண்பர்களுடன் அல்-நூர் மசூதிக்கு சென்ற ஜக்கரியாவுக்கு கிரைஸ்ட்சர்ச்சில் குடும்பத்தினர் இல்லை என்பதால், அவர் இந்த சம்பவத்தில் இறந்ததை உறுதிப்படுத்துவது சிரமமாக இருந்தது.


view-source:jaffnamuslim

இலங்கை அணியுடனான சர்வதேச இருபது20 தொடரின் இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 16 ஓட்டங்களால் வென்றது.
தென் ஆபிரிக்காவின் சென்சூரியன் மைதானத்தில் நேற்று இரவு இப்போட்டி நடைபெற்றது.


முதலில்; துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களைக் குவித்தது. ரீஸா ஹென்ரக்ஸ் 65 ஓட்டங்களையும் வான் டேர் டுசென் 64 ஓட்டங்களையும் பெற்றனர். இவ்விருவரும் 2 ஆவது விக்கெட்டுக்காக 116 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விககெட் இழப்புக்கு 164 ஓட்டங்களையே பெற்றது. 8 ஆவது வரிசை துடுப்பாட்ட வீரர் இசுறு உதான 48 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஏனைய வீரர்கள் பிரகாசிக்கவில்லை.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தென் ஆபிரிக்க அணி தற்போது 2:0 விகிதத்தில் கைப்பற்றியுள்ளது


இலங்கையின் முன்னிலை வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணியின் முதல் 6 போட்டிகளிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார். உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இலங்கை குழாமுக்கு தகுதி பெறுவதற்காகவே அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

உலக கிண்ண சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாமுக்குத் தெரிவு செய்யப்பட விரும்பும் வீரர்கள், எதிர்வரும் சுப்பர் மாகாண ஒருநாள் சுற்றுப்போட்டியில் விளையாட வேண்டும் என இலங்கைக் கிரிக்கெட் தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு லசித் மாலிங்க தீர்மானித்துள்ளார்.

இவ்வருட ஐ.பி.எல். ஏலத்தில் 2 கோடி இந்திய ரூபாவுக்கு லசித் மாலிங்கவை மும்பை இண்டியன்ஸ் அணி வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மாகாண சுப்பர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏப்ரல் 4 முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித்தலைவராகவும் லசித் மாலிங்க விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் மும்பை இண்டியஸ் அணயின் முதல் 6 போட்டிகளிலிருந்து விலகியிருப்பதற்கு மாலிங்க தீர்மானித்துள்ளார்.


பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த வாழ்த்துக்கடிதத்தில், தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில்,ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி அனுப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். மேலும், மோடியின் வாழ்த்துச்செய்தியை வரவேற்பதாகவும், இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரிவான ஆலோசனை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளதாகவும் தனது டுவிட்டில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா தூதரக உறவுகள் வைத்துள்ள நாடுகளின் தேசிய தினத்திற்கு, நாட்டின் பிரதமர் வாழ்த்துச்செய்தி அனுப்புவது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில்தான் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி, வழக்கமான வாழ்த்துச்செய்தியை அனுப்பியதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட வாழ்த்துச்செய்தியில், பிரதமர் மோடி 'டவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரஸீன் ரஸ்மின்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் நிறைவு விழா மற்றும் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கேட்போர் கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வெள்ளிக்கிழமை (22) புத்தளம் நகருக்கு விஜயம் செய்தார்.

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கோரி புத்தளத்தில் நீண்ட காலமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயத்தில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சர்வமத குழு மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பினருக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்தும், இன்றைய தினம் புத்தளத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சர்வமத குழு உள்ளிட்டோருக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறும் கோரியே இந்த கறுப்புக் கொடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் , காலை 8.30 மணிக்கு ஒன்று௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், குப்பைக்கு எதிரான பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு, குப்பைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை புத்தளம் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி வருகை தரவிருந்த பிரதேச செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது, அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அங்கு பதற்ற நிலை காணப்பட்டது. விஷேட அதிரடிப்படை, கலகம் தடுக்கும் பொலிஸாரும், நீர்த் தாரை பீச்சும் கவச வாகனமும் தயார் நிலையில் இருந்தனர். அத்துடன்,புத்தளம் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புத்தளம் பொலிஸார், இந்தப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, புத்தளம் நீதிமன்றத்தினால் பெற்றுக்கொண்ட தடையுத்தரவை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். எனினும், குறித்த போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதேச செயலகத்திற்கு செல்லவதை பொலிஸார் தடுத்து நிறுத்திய போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து களைந்து சென்று புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக திறந்து வைக்கப்படவிருந்த விளையாட்டு மைதானம் வரை நடந்து சென்றனர்.

புத்தளம் நகர விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒன்று ௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் குப்பைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்களையும் எழுப்பிக் கொண்டு கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கும் அமைதியின்மை ஏற்பட்டது. இதனால், குறித்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி கலந்துகொள்ள இருந்த போதிலும் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையால், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்டோர் குறித்த விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்தனர்.

இதன்போது, குப்பை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக சமயத் தலைவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றுக்கு சக்தி விளையாட்டு மைதானத்தில் வைத்து சந்திப்பதற்காக அனுமதி பெற்றுத் தருவதாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் வாக்குறுதி வழங்கிய போதிலும் இறுதி நேரத்தில் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை.

இதேவேளை, நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் பிரதான நிகழ்வு புத்தளம் சக்தி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டுள்ளார் என்பதை அறிந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், கறுப்புக் கொடிகளை ஏந்திக்கொண்டு புத்தளம் பஸ் நிலையத்திலிருந்து சக்தி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக செல்ல முற்பட்டனர்.

சக்தி விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பலத்த பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்ததுடன், அந்த மைதானத்திற்கு செல்லும் சேர்விஸ் வீதியிலும் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.


இதன்போது, சக்தி விளையாட்டு மைதானத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது, அவர்களை அங்கு செல்ல விடாது, பொலிஸாரும், கலகம் தடுக்கும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தினர். இதன்போது, அங்கும் அமைதியின்மை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மீது, பொலிஸார் தடியடி பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த தடியடிப் பிரயோகத்தினால் ஆண்கள், பெண்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு இளைஞர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- நியூஸீலாந்திலிருந்து, மரீனா இல்யாஸ் ஷாபீ -

கிரிஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை அடுத்து நாடெங்கிலும் உள்ள பள்ளிவாசல்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன . ஆயுதம் தாங்கிய போலீஸ் உத்தியோகத்தர் பள்ளிவாசலுக்கு வெளியே காவல் இருந்தனர். இதைத்தொடர்ந்து பல கிறிஸ்தவ தேவாலயங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஆரம்பித்தன . 17 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதலை கண்டிக்கவும், இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவற்கும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அதில் ஒரு பேச்சளராக என் கணவரும் கலந்து கொண்டார்.


மண்டபம் நிரம்பி வழிந்தது . ஆசனங்களை முஸ்லிம்களுக்கு ஒதுக்கி விட்டு அந்த மாற்று மத சகோதரர்கள் நின்றுகொண்டு நிகழ்ச்சியை அவதானித்தார்கள் . முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதலை கண்டித்து பேசிய பாதிரியார் தன் பேச்சை ஆரம்பிக்க முன் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் " என்று சொல்லி எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தார் .


சரியாக அஸர் தொழுகைக்கு நேரம் வந்ததுடன் நிகழ்ச்சியை இடைநிறுத்தி , தயவு செய்து இங்கேயே உங்கள் தொழுகையை ஜமா த்துடன் தொழுங்கள் . உங்களுக்ககாக ஒரு தனி அறையை துப்பரவு செய்திருக்கிறோம் என்று அறிவித்ததும் உடல் முழுவதும் புல்லரித்தது . என் கணவர் தொழுகையை நடத்தினார் .


நாங்கள் தொழுகைக்கு நின்றதும் அவர்கள் எல்லோரும் எங்கள் பின்னால் அணி அணியாக காவலரண்கள் போல் நின்றார்கள் .


தொழுகை முடித்து , உயிரிழந்தோருக்காக துஆ கேட்கும்போது அவர்களும் குலுங்கி 
குலுங்கி அழுதபடியே ஆமீன் சொன்னார்கள் .


பின்னர் , பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் நின்று கட்டித் தழுவி முஸாபஹா செய்தார்கள் ( ஆண்/ பெண் கலப்பு இஸ்லாத்தில் இல்லை என்பது பற்றி பாதிரியார் ஏற்கனவே மேடையில் விளக்கம் கொடுத்து விட்டார் . அதனால் எங்களுக்கு எந்த சங்கடமும் ஏற்படவில்லை ). 
மிகவும் நெகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் , நிகழ்ச்சி முடிந்த பின்பு எல்லோருக்கும் ஹலால் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள் . 


அதைத்தொடர்ந்து மஹ்ரிப் தொழுவதற்காக போலீசாரின் அனுமதியுடன் பள்ளிக்கு வந்தோம். தேவாலயத்துக்கு வந்திருந்த அத்தனைபேரும் எங்களை பின்தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வந்தார்கள் . மதில்களை சுற்றி மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து பூக்களால் பள்ளிவாசலை அழகுபடுத்தினார்கள் . அவர்களும் பள்ளிவாசலுக்குள் அழைக்கப்பட்டபோது ஸலாம் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் . சில பெண்கள் தலையை மறைப்பதற்காக முன்கூட்டோயே முந்தனைகளை ஆயத்தமாக எடுத்து வந்திருந்த னர். தலையை திறந்து வந்த பெண்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர் . திரும்பிப் போவற்குள் சிலர்" இன்னா லில்லாஹி வ'இன்னா இலைஹி ராஜிஊன் " சொல்வதற்கு கற்றுக்கொண்டு விட்டார்கள் . பள்ளிவாசலில் சிந்திய ஷுஹதாக்களின் இரத்தம் வீண்போகவில்லை . அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் . அவன் திட்டம் தீட்டுவோருக்கெல்லாம் மேலாக திட்டம் தீட்டுபவன் .


ஆனால் , கிரிஸ்டசர்ச் சம்பவத்தின் பின்னர் 350 ஒரேயடியாக இஸ்லாத்துக்குள் நுழைந்து விட்டதாக ஒரு பொய்யான வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருவதை பார்த்தேன் . இது பொய்யான தகவல் . உணர்ச்சி விடப்பட்டு வதந்திகளை பரப்பி எங்கள் மார்க்கத்தை இழிவு படுத்த வேண்டாம். ஹாமில்டன் பள்ளிவாசலுக்கு பூக்கொத்துகளுடன் அனுதாபம் தெரிவிக்க வந்த சுமார் 50 - 55 வயது மதிக்கத் தக்க ஒரு தம்பதி கண்ணீர்மல்க ஷஹாதா மொழிந்தனர் என்ற செய்தி மட்டுமே உண்மை. 21.03.2019


பிற்குறிப்பு 

கிரிஸ்டசர்ச் சம்பவத்தின் பின்னர் 350 இஸ்லாத்துக்குள் நுழைந்ததாக சில ஆங்கில புளக்குகளை மேற்கோள் காட்டி எமது இணையமும் குறித்த தகவலை பதிவிட்டிருந்தது. எனினும் அந்த தகவல் தவறானது என அறிந்ததும் குறித்த செய்தி நீக்கப்பட்டு விட்டமை கவனிக்கத்தக்கது.

நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் (தற்பொழுது மூடப்பட்டிருக்கும்) மஸ்ஜிதுன் நூர் இற்கு முன்னால் உள்ள பூங்காவில் முஸ்லிம்கள் இன்று -22- ஜும்மாத் தொழுவதை பார்த்து தமது அனுதாபத்தை அபிமானத்தை தெரிவிக்க குழுமியிருக்கும் நியூஸிலாந்து மக்கள் !


இன்று தொழுகைக்கான அதான் நியுஸிலாந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் ஒலி/ஒளி பரப்பபடுமாறும் தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்குமாறும் நியூஸிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


என்றும் எங்கும் தீய ஷைத்தானிய சக்திகள் மிகச் சிறுபான்மையினரே, பெரும்பான்மையான மனித நேய சக்திகளை உரிய விதத்தில் அணுகுதல் தான் தீய சக்திகள் மீது விழும் பேரிடியாகும்.


முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு பரப்புரைகளுக்கு எதிராக அணிதிரளுமாறு சர்வதேசத்தை நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா அடர்ர்ன் கேட்டுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்!


நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்ன சொல்லி, எப்படி துப்பாக்கி வைத்து கொள்வதற்கு உரிமம் வாங்கினான் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


நியூசிலாந்தின் Christchurch பகுதியில் இருக்கும் இரண்டு மசூதிகளில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Brenton Tarrant என்ற நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூடு காரணமாக 50 பேர் பலியாகினர்.


இந்த சம்பவம் காரணமாக இன்னும் நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.


இந்நிலையில் இப்படி பலரையும் கொல்லும் அளவிற்கு துப்பாக்கி வாங்கியதற்கு அவன் என்ன சொல்லி வாங்கினான், அவனுக்கு எப்படி இந்த துப்பாக்கிகளுக்கு உரிமம் கிடைத்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முறைபடி உரிமம் பெற வேண்டும். அதன் படி 2017-ஆம் ஆண்டு Brenton Tarrant துப்பாக்கி வைத்து கொள்வதற்கு உரிமம் வாங்கியுள்ளான்.


இவன் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு துப்பாக்கி வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளான். அதன் படி அதிகாரிகள் அந்த மாதம் அவனுடைய வீட்டிற்கு ஏன் எதற்காக துப்பாக்கி வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.


அப்போது அவன், தன்னுடைய பாதுகாப்பிற்காக விண்ணப்பித்துள்ளேன் என்று கூறியுள்ளான். அதன் பின் அதிகாரிகள் அடுத்தடுத்த வழி முறைகளை பின் பற்றி 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துப்பாக்கி பயன்படுத்துவதற்கான உரிமம் கொடுத்துள்ளனர்.


அதன் பின் அவன் அதே ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு semi-automatic துப்பாக்கிகள் வாங்கியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தை அண்மித்து இடம்பெற்றுவரும் வன அழிப்பு விவகாரம் தொடர்பில், 
நாடாளுமன்றத்தில் இன்று (22), கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.


ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பியால், நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்தே, இந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தன.


2012ஆம் ஆண்டுக்குப் பின்னர், எந்தவொரு காடும் அழிக்கப்பட்டு, மீள்குடியேற்றம் செய்யப்படவில்லையா என்றே, அநுரகுமார எம்.பி கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மஹிந்தவின் அரசாங்கம், கூகுள் மெப்ஸ் பார்த்துக்கொண்டு, பொதுமக்களின் குடியிருப்புப் பிரதேசங்களை, வனப் பிரதேசங்களாக வர்த்தமானியில் அறிவிப்பிட்டதெனக் கூறினார்.


மேலும் வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும், தானோ அல்லது தான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால், எந்தத் தண்டனையையும் ஏற்பதற்குத் தயாரெனவும் இந்தப் பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய, சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மையை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்றில் இன்று (22) கோரினார்.


சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அல்லது சபாநாயகர் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நிறுவி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென, அமைச்சர் வலியுறுத்தினார்.


கண்டியில், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளின் பின்னர், கண்டி தலதா மாளிகைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாங்கள் சென்றிருந்த போது, வில்பத்து தொடர்பில் மகாநாயக்க தேரர், தன்னிடம் கேள்வியெழுப்பி, அது சம்பந்தமான உண்மை நிலைகளைக் கேட்டபோது, தான் அதுபற்றி தெளிவுபடுத்தியதாகவும் சங்கைக்குரிய மகாநாயக்க தேரரிடம், புதிய ஆணைக்குழுவை நிறுவி இதன் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணருமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், அமைச்சர் தெரிவித்தார்.


“நாங்கள் நிரபராதிகள். வில்பத்து, அநுராதபுரத்திற்கும் புத்தளத்துக்கும் இடையில் உள்ளது. நான், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவன். புலிகளால் விரட்டப்பட்ட அகதி. அகதி முகாமிலிருந்தே நாடாளுமன்றத்துக்கு வந்ததேன். எனது தந்தையார், ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ இருந்தவரல்ல. நான் பாதிக்கப்பட்டப் சமூகத்திலிருந்து வந்ததால், நான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்புவதும் அதனைத் தீர்த்து வைப்பதுமே எனது கடமை. அதனையே நான் செய்கின்றேன்.


“வட மாகாண முஸ்லிம் அகதிச் சமூகத்துக்கு புகலிடம் தந்த புத்தளம் பிரதேசத்தில் இடம்பெறும் பிழையான நடவடிக்கைகளை, எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த மாவட்டம், ஏற்கெனவே அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் மாசுபடுத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையம், சீமெந்துத் தொழிற்சாலை என இன்னோரன்ன திட்டங்கள், வலிந்து இந்த பிரதேசத்தில் திணிக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


“தற்போது, மீண்டும் இந்த மாவட்டத்தில் ஒரு சூழல் பாதிப்பை உருவாக்கும் வகையில், கொழும்பிலிருந்து 170 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அருவைக்காட்டில், குப்பைகளைக் கொண்டு சென்று புதைக்கின்றனர். நாங்கள் தொடர்ச்சியாக இந்த விடயத்தைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கின்றோம். அண்மைய இரண்டு வாரமாக, குப்பைத்திட்டத்தை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும், வெளியிடங்களிலும், நாங்கள் கருத்துக்களைக் கூறியும் இதனை தடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் விளைவாகவே, அதனைத் திசை திருப்பும் வகையில், வில்பத்துப் புரளியை மீண்டும் கிளப்பியுள்ளனர். இது எதிர்க்கட்சியினால் செய்யப்படவில்லை.


“இனவாதிகளை இந்த விடயத்தில் சிலர் தூண்டிவருவதாகவே எமக்குப் படுகிறது. ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும், கடந்த சில நாள்களாக, நான் மிக மோசமாக விமர்சிக்கப்படுகின்றேன்.


“முன்னாள் அமைச்சர் அநுர பிரயதர்சன யாப்பா, சுற்றாடல் அமைச்சராக இருந்த போது, 2012ஆம் ஆண்டில், முசலிப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த காணிகள், கொழும்பிலிருந்து கொண்டு GPS தொழில்நுட்பமுறை மூலம், வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு, வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்டன. உண்மையில், முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த பாரம்பரியக் கிராமங்கள் பல, இந்த வர்த்தமானிக்குள் உள்ளீர்க்கப்பட்டன.


“இதேவேளை, அங்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள், புத்தளத்தில் அகதிகளாக இருந்தனர் என்பதை ஞாயபகப்படுத்த விரும்புகின்றேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதிச் செயலணியின் ஊடாக, மெனிக் பாமில் இருந்த 3 இலட்சம் அகதிகளைக் குடியேற்றினேன். பின்னர், பலவந்தமான வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை, நான் குடியேற்ற விழைந்த போது, அமைச்சுப்பதவி மாற்றப்பட்டு கைத்தொழில் அமைச்சராக்கப்பட்டேன்.


“வன்னி மக்களின் பிரதிநிதி என்ற வகையில், எனது சமூகத்தைச் சார்ந்த இந்த மக்களைக் குடியேற்றுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் மூலம், அகதி மக்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். எனினும், குடியேறுவதற்கு எந்தவிதமான காணிகளும் இல்லாத நிலையில், இங்கு முன்னர் வாழ்ந்த இந்த மக்களுக்குச் சொந்தமான, வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 2,800 ஏக்கரை விடுவித்து, குடியேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


“மீள்குடியேற்றத்துக்கென உருவாக்கப்பட்ட செயலணியினால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை ஏக்கர் காணி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்காணிகள், முறைப்படி சட்டரீதியாகவே விடுவிக்கப்பட்டன.


“முசலி பிரதேசத்தில் உள்ள பாலைக்குளி, மறிச்சுக்கட்டி, கரடிக்குளி ஆகிய முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமங்களுக்கும் வில்பத்துவுக்கும், துளியளவும் எந்தத் தொடர்புமில்லை. காடாகக் கிடந்த மறிச்சுக்கட்டிக்கும் சிலாவத்துறைக்கும் இடையில் போக்குவரத்து பாதையை உருவாக்குவதற்காக, இருமருங்கிலும் இருந்த காடுகளை, இராணுவம் அழித்தது. அதற்கு அண்மித்ததாகவே விடுவிக்கப்பட்ட காணிகள், மக்களுக்கு வழங்கப்பட்டன. அதுவும் பிரதேசச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஊடாக காணிகள் சட்டரீதியாக வழங்கப்பட்டன. பிரதேசச் செயலகத்தின் ஊடாகவே அவை துப்புரவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பிறகு இற்றையவரை, அந்த மக்களுக்கு எந்தக் காணிகளும் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் வழங்கவில்லை.


“தற்போது ஊடகங்கள் மூலம் கட்டவிழ்க்கப்பட்டுவரும் மிகவும் மோசமான பிரசாரங்கள், சுத்தப் பொயானவையாகும். சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும், பெரிய பிரளயத்தைக் கிளப்பி, என்னையே மீண்டும் மீண்டும் குறிவைத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றனர். இதனை யார் செய்கின்றார்கள் என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். வில்பத்து என்பது, எமது நாட்டின் அருஞ்செல்வமாகும். நாங்கள் இந்த பொக்கிஷத்தை எந்தக்காலமும் அழிக்கவில்லை, அழிக்கவும் எண்ணவில்லை.


“24 மணித்தியாலயத்தில் புலிகளால் விரட்டப்பட்ட சமூகமே எமது சமூகம். நாங்கள் குற்றமிழைக்காமலே தண்டிக்கப்பட்டவர்கள். கடந்த சில நாள்களாக, தொலைக்காட்சிகளில் மோசமான பிரசாரங்களை ஊடகங்கள் எடுத்துச் செல்வதோடு மாத்திரமில்லாது, மதகுரு ஒருவர், இல்லாத பொல்லாத, இட்டுக்கட்டப்பட்ட பொய்களையெல்லாம் விஷம் போல் கக்கி வருகின்றார். வில்பத்துக்கும் எங்கள் பாரம்பரிய பூமிக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்று, நான் இந்த உயரிய சபையில் வலியுறுத்துகின்றேன். வில்பத்து பிரதேசத்தில், உல்லாசப் பயண ஹோட்டல்கள் இருக்கின்றன. அது மாத்திரமின்றி? அண்மைய நாள்களில், கஜுவத்தை என்ற பிரதேசத்தில், காடுகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவைகளை யார் செய்வது என்றுத் தேடிப்பாருங்கள். எமது மக்களுக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் எவ்விதத் தொட​ர்பும் இல்லை என்பதை, பொறுப்புடன் கூற விரும்புகின்றேன்” என்று, அமைச்சர் பதியூதீன், மேலும் கூறினார். 


அமைச்சர் பேசி முடிந்ததும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க, மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியதாவது,


“எங்கள் கோரிக்கையை ஏற்றே, மீள்குடியேற்றத்துக்கென புதிய செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. பலாத்காரமாகவோ வலுக்கட்டயாமாகவோ, இந்தக்குழு கையாளப்படவில்லை. மனிதாபிமான அடிப்படையிலயே இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமாத்திரமின்றி, மக்களுக்கு வழங்கப்பட்ட அரை ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, எந்தக் காணிகளும் அபகரிக்கப்படவில்லை” என்றும், அமைச்சர் தெரிவித்தார்.

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் லலித் நிமல் செனவீர அவர்களுக்கான நியமனக் கடிதம் இன்று (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோகவும் கலந்து கொண்டார்

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget